கழுதைக்கும் யோகத்திற்கும் என்ன சம்பந்தம் ?
அதற்கான விடை : தவ்வை
தவ்வையின் கொடி : காக்கைக்கொடி
தவ்வையின் வாகனம் : கழுதை
தவ்வையின் கையில் : துடைப்பம்
'கந்தழி' என்ற இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர்கள் தாய் வழிபாட்டில், கொற்றவைக்கு அடுத்து அதிகம் வணங்கிய ஒரு தெய்வம் தவ்வை.
மூத்த தேவி என்று அழைக்கபட்ட இத்தெய்வம் நாளடைவில் மூதேவி என்று மருவி வழங்கலாயிற்று.
பழையோள், காடுகிழாள், கானமா செல்வி என்று சங்க இலக்கியங்கள் ஏற்றிப் போற்றும் கொற்றவை, மிகப் பழைமையான தமிழர் பெண்தெய்வமாக இனங்காணப்பட்டவள். அதற்கு அடுத்து தவ்வை வழிபாடு தமிழகத்தில் வெகு பிரசித்தம், சனீசுவரனின் மனைவியாக இவரை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவருடைய மகன் குளிகன் , மகள் மாந்தி.
ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும், பிறகு சாக்ததிலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.
உரத்தின் அடையாளம் ‘தவ்வை’. நெற்கதிர்களின் அடையாளம் ‘திருமகள்’. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் இயற்கை உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள் தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. தவ்வை வளமை, செல்வத்தின் குறியீடு. விளைச்சலுக்கு அதிபதி தவ்வை.
தவ்வை சுத்தத்தின் தெய்வம் , அவர் கையில் உள்ள துடைப்பம் அழுக்குகளை நீக்குகிறது. துடைப்பம் செல்வத்தின் அடையாளமாக இன்றளவும் கிராமத்தில் அதை மிதிக்க அனுமதிப்பதில்லை.
சுத்தம் மற்றும் விளைச்சலுக்கான தெய்வம் ஆன படியால் தவ்வையை வைத்து தான் சுத்தம் சோறு போடும் என்ற வழக்கு வந்தது.
8 ம் நூற்றாண்டில் நந்தி வர்ம பல்லவனின் குலதெய்வமாக விளங்கியுள்ளது , 13ம் நூற்றாண்டில் சோழர்கால சிற்பங்கள் பல கிடைத்துள்ளன.
13ம் நூற்றாண்டு வரை மிக பிரபலமாக இருந்த தவ்வை வழிபாடு குறைந்து இன்று சில கோயில்களில் மட்டுமே வழிபட காண கிடைக்கிறது.
சேட்டை, கரிய சேட்டை , மாமுகடி , முகடி , மோடி, மூத்த தேவி, பழையோள், தூமவதி, காக்கைகொடியோள், மாயை, தூம்ரகாளி, ஏகவேணி, மகாநித்திரை, ஒற்றை சடையள் போன்ற பெயர்களில் அழைப்பர். சேட்டை என்றால் தமிழில் மூத்தவள் என்று பொருள் (சேட்டன் - அண்ணன்), இதுவே சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று மருவியது.
கையில் பணப்பெட்டியுடன் காட்சியளிக்கும் தவ்வை பின் நாளில் ஏனோ தரித்திரத்தின் தெய்வமாக ஆக்கப்பட்டாள்.
தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர். இவ்வண்ணார்களை ஏகாலி என்றும் அழைக்கின்றனர்.
பயிர் வளம், செல்வ வளம், குழந்தைப்பேறு அருளும் தவ்வையை தமிழ் வியாபாரிகள் யோகம் அருளும் தாயாக தொன்று தொட்டு வணங்கி வந்துள்ளனர் அதன் அடையாளமாக அவரது வாகனமான கழுதையை தங்கள் வியாபார கூடங்களில் வைக்கின்றனர் , கெட்டவைகளை நீக்கி அவை யோகங்களையும் வளத்தையும் அருளுவதால் !
தமிழர் செல்வ அடையாளங்களான தவ்வை , கடல் நீரோட்ட வழிகாட்டிகளான ஆமை போன்றவைகளை அபசகுனங்களாக பின்னாளில் ஆக்கிவிட்டனர்.